டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையின் சவ கிடங்கில் வைக்கப்பட்டிருந்த தற்கொலை செய்து கொண்ட பெண் ஒருவரின் உடலத்தில் பாலியல் வன்புணர்வு நடைபெற்றதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக மக்கள் மத்தியில் கடும் அதிருப்தி நிலவுவதுடன் போராட்டமும் தீவிரமடைந்துள்ளது.

கடந்த 24 ஆம் திகதி ஹட்டன் எபோட்சிலி தோட்டத்தைச் சேர்ந்த தொழிலாளி பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட நிலையில், அவரது உடல் டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையின் சவ கிடங்கில் வைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

அந்த உடலத்தில் பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெற்றிருக்கலாம் என்ற சந்தேகத்தை அப்பகுதி தோட்டத் தொழிலாளர்கள் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உதவி தலைவர் கணபதி கனகராஜ் அவர்களின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.
இதனைத் தொடர்ந்து கணபதி கனகராஜ் அவர்கள் கடந்த 25 ஆம் திகதி இச்சம்பவம் குறித்து கிளங்கன் ஆதார வைத்தியசாலையின் வைத்திய அதிகாரியின் கவனத்திற்கு கொண்டு வந்ததாக கூறப்படுகிறது.

ஆயினும் கடந்த எட்டு நாட்களாக இதுகுறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறி, எபோட்சிலி தோட்ட மக்கள் நேற்று (04) வைத்தியசாலை வளாகத்தில் ஒன்று கூடி போராட்டம் நடத்தினர்.
மரணித்த பெண்ணின் உடலத்துக்கு சவ கிடங்கில் என்ன நடந்தது என்பதைக் குறித்து முழுமையான விளக்கத்தை வழங்க வேண்டும் என்றும், சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் வைத்தியசாலை ஊழியர்கள் மூவரையும் உடனடியாக கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதற்கிடையில், டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் பணிபுரியும் மூவர் மேற்கொண்டதாகக் கூறப்படும் இந்த தூர்நடத்தை சம்பவம் பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், நீதி கோரி இன்றைய தினமும் மக்கள் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் மக்கள் மத்தியில் வலுத்து வருகின்றது.
செய்தியின் உண்மைத்தன்மை
இச்சம்பவம் தொடர்பில் கல்வி அமைச்சு மற்றும் காவல்துறையினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.